Sunday, February 7, 2010

சசிகலா குடும்பத்தால் கரைகிறதா அதிமுக ?

சசிகலா குடும்பத்தால் கரைகிறதா அதிமுக ?

தமிழக தற்போதைய முதல்வர் குடும்பம் மிகப் பெரியது..அதனால் அதன் "தேவைகள்" மிக அதிகம்.ஆனால் குழந்தைகள் ஏதும் இல்லாத முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்ப தேவகள் மிக குறைவு. ஆதலால் தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் அவரது ஆட்சி காலத்தில் நன்மைகளை , ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கி இருக்க முடியும் ஆனால் நடந்ததோ வேறு..பல முறை சிந்தித்து பார்த்தது உண்டு மற்றும் தென் மாவட்ட அதிமுகவினர் பலரும் வருத்தப்பட்டு சொல்வது கட்சி முன்னை போல் இல்லை என்பது தான்.. இதனால் பல தென்மாவட்ட அதிமுக எம்.ஜீ.ஆர் காலத்து விசுவாசிகள் பலரும் ஒதுக்கப்பட்டு கட்சியில் "செல்வாக்கு" இழந்து தத்தம் தொழில்களை கவனிக்க சென்றது ஒரு புறம். இப்பொது அதிமுக வில் கட்சி நிர்வாகிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் பல புறக்கணிப்புகள் என ஒரு தொண்டனின் கடிதமாக தினமலர் நாளிதழில் வந்த இந்த கடிதம் சற்று மனதை நெருடியது... அந்த கட்சியில் இதே நிலை நீடித்தால் அதன் எதிர்காலம் கேள்விகுறியாகும் என்பதில் ஐயமில்லை

########################################################################


அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கட்சியின் உண்மைத் தொண்டர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கம் எப்படி சிதறுகிறது என்பதை அந்த கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார். அந்த கடிதத்தின் விவரம்: நீங்கள் அறிவிக்கும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் கையில் கொடியோடு முன்னால் நின்று போராடும்; தேர்தல் பிரசாரத்தின் போதும், நீங்கள் பங்கேற்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் உங்கள் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடையும், ஏழைத் தொண்டனின் மனம் திறந்த மடல்.




சமீபத்தில், நீங்க வெளியிட்ட நிர்வாகிகள் நியமனப் பட்டியலை, முழுசா படிச்சு முடிக்க, இத்தனை நாளாகி விட்டது. முதல் பட்டியல் வெளியான போது, 100 பக்கங்களை தாண்டிய, நம்ம கட்சிப் பத்திரிகை உடனே கைக்கு கிடைக்கலை. பத்திரிகைக்கு அத்தனை, "டிமாண்ட்'. ஒருவழியாக அடுத்த நாள், முழு லிஸ்ட்டையும் படிச்சுப் பார்த்தேன். என்னைப் போன்ற, சாதாரணத் தொண்டர்களுக்கும், எம்.ஜி.ஆர்., காலத்து ஆட்களுக்கும், நிர்வாகிகள் பட்டியலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்னு, நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. தலைவர் காலத்து ஆட்களை, அவரால் அடையாளம் காணப்பட்ட விசுவாசிகளை, கட்சியில் இருந்து விரட்டற வேலை தான், பல ஆண்டுகளாக தொடர்ந்துட்டு இருக்கே. பதவிக்கு ஆசைப்படாத என்னைப் போன்ற சில பேர் மட்டும் தானே, கட்சியில் இப்போது எஞ்சியிருக்கிறோம். தலைவர் மறைவுக்குப் பிறகு, கட்சி இரண்டான போது, உங்க பக்கமே என்னைப்போல பலரும் சாய்ஞ்சாங்க. உங்க விசுவாசிகளாக இருந்த அவங்களில் பெரும்பாலானவங்க, கட்சி மாறி, இப்ப அதே செல்வாக்கோடு இருக்காங்களே. அவங்களை யார் வெளியேத்தினாங்கன்னு யோசிச்சிருக்கீங்களா?




எஞ்சியிருந்த என்னைப் போன்ற தலைவர் விசுவாசிகள் அனைவரும், உங்கள் விசுவாசியாக மாறினோம். 1991ல் கழக ஆட்சி மலர்ந்தது; நாங்களும் மகிழ்ந்தோம். தலைவருக்கு பின், "அம்மா'தான் கட்சி, என்ற எண்ணம் அனைவரிடமும் உறுதிப்பட்டது. ஆனால், அதன் பிறகு கட்சிக்கும், விசுவாசிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் துவங்கி விட்டன. நீங்க யார் பிடியில் இருக்கீங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சுக்கவே பல வருஷம் ஆயிடுச்சு. யாரோ ஒருவரின் சொல்தான் நம்ம கட்சியில அம்பலம் ஏறுங்கிற பேச்சு அந்த காலத்தில இருந்தது. அது பேச்சு மட்டுமல்ல, உண்மைதாங்கிற மாதிரி, அவர் கைகாட்டினவங்க அத்தனை பேரும் உச்சத்துக்கு போனாங்க. 1989லும், 1991லும் கட்சியின் வேட்பாளர் பட்டியலையே அவர்தானே தயாரிச்சு வெளியிட்டார். கட்சி வளர்ச்சி பத்தியெல்லாம், அவங்க கவலைப்பட்ட மாதிரி தெரியலை. கரன்சிகளை குவிப்பதுதான் அவங்க நோக்கம்ங்கிறது என்னை மாதிரி தொண்டர்களுக்கு வெளிப்படையாக தெரிந்தது. ஆனாலும் என்ன செய்வது? உங்களைச் சந்திச்சு புகார் சொல்லவா முடிஞ்சது. அடுத்ததாக திடீர், "வளர்ப்பு மகன்' வந்து குதிச்சாரு. அவருக்கு நடத்தின கல்யாணம் தான், நம்ம ஆட்சியையே முடிவுக்கு கொண்டு வந்துச்சு. தனியா அமைப்பு நடத்தற அளவுக்கு, "செல்வாக்கு' ஆன பின், அவருக்கு, "கட்டம்' கட்டினீங்க.




அப்பாடா... இதோட முடிச்சிடுச்சு... இனிமேல் உங்க கையில் கட்சி இருக்கும்னு பார்த்தா, தேனிக்காரர் ஒருத்தர், திடீர்னு கட்சியில் குதிச்சாரு. கொஞ்ச காலம் அவர் கையில் கட்சி சிக்கி சின்னாபின்னப்பட்டது. அவரால் முடிஞ்சளவுக்கு, கட்சியை சோதனைக்குள்ளாக்கினார். அப்பறம் அவர் ஒதுங்கினார். அடுத்ததா, கட்சியை காப்பாத்த (?) திடீர்னு ஒரு, "தேவன்' குதிச்சாரு... அம் மாவை விட, "பவர்புல்' ஆள் தான்னு, அவர் ஆடிய ஆட்டம் தாங்க முடியலை. நல்லவேளையா, கட்சியில் அவரோட ஆட்சிக்காலம் கொஞ்சநாள் தான் நீடிச்சது. அந்த குடும்பத்தை சேர்ந்த மொத்த ஆட்களும் வந்து, இருந்து, சம்பாதிச்சுகிட்டு வெளியே போனாங்க. இதோட முடிஞ்சிடுமோன்னு நானும் நிஜமாவே, நம்பினேன். ஆனால், அடுத்ததா இப்ப ஒருத்தர் பாசறை நடத்த வந்திருக்காரு. அ.தி.மு.க., ஆரம்பிச்சதில் இருந்து கட்சியில் இருந்த, போராட்டம் நடத்திய, சிறை சென்ற மூத்த தலைவர்கள் எல்லாம், அவருக்கு கொடுக்கும் மரியாதையைப் பார்த்து நொந்து போயிட்டேன். இன்னைக்கு வரைக்கும் இந்த, "ராஜமரியாதை' தொடர்ந்துகிட்டு இருக்கு. இது தவிர, மண்டலத்துக்கு ஒருத்தருன்னு அவங்க குடும்பத்து ஆட்கள் பண்ணும் ரவுசால், ஒவ்வொரு மண்டலமாக கட்சி காணாமல் போயிட்டு இருக்கு. மொத்தமாக கட்சியை அழிக்கணும்ங்கிற, "அசைன்மென்ட்'டோட அந்த கும்பல் இறங்கியிருக்குன்னு நம்ம மாவட்டம் வெளிப்படையா ஒருநாள் புலம்பினாருங்க. அவரு சொன்னதை அப்படியே சொல்றேன் கேளுங்க.




கட்சியில, அம்மாவை யாரும் நெருங்கக்கூடாதுன்னு ஒரு, "குரூப்' செயல்படுது. மாவட்ட, மாநில பொறுப்பில இருக்கிற நிர்வாகிகளையும், அவங்கதான் ஆட்டிப்படைக்கிறாங்க. இதையும் தாண்டி, அம்மாவை நெருங்கிய எஸ்.வி.சேகர், பதர் சயீது, மைத்ரேயன் உள்ளிட்ட பல பேர் ஒதுக்கப்பட்டிருக்காங்க... இப்ப வெளியான நிர்வாகிகள் பட்டியல்ல அம்மா விசுவாசிகளான பி.எச்.பாண்டியன், வளர்மதி, கரூர் சின்னச்சாமி, பொங்கலூர் தாமோதரன், தளவாய் சுந்தரம், துரை கோவிந்தராஜ், ஆதிராஜாராம் உள்ளிட்ட ஏராளமானோர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருக்காங்க... அவங்க சொல்லுக்கு, மறு பேச்சு பேசாதவர்களுக்கு, மட்டும் தான் மறுபடியும் பதவி கிடைச்சிருக்கு. கட்சியை அழிப்பதற்காக, தி.மு.க.,வுடன் ஒப்பந்தம் போட்டு அவங்க செயல்படறாங்க. தேர்தல் நேரத்தில கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்தியதில் இருந்து, முக்கியமான வேட்பாளர்களை தோற்கடிக்கவும் இந்த கும்பல்தான் காரணமாக இருந்திருக்கு. பல தொகுதிகளில், "டம்மி'யான வேட்பாளர்களைப் போட்டு, தி.மு.க., ஜெயிக்க இவங்க துணை போயிருக்காங்க. அரசியல் காரணத்துக்காக போடப்பட்ட ஒரு சின்ன, "எப்.ஐ.ஆர்.,' விவகாரத்தை பெரிதாக்கி, பா.ம.க.,வை திட்டமிட்டு வெளியில் அனுப்பினாங்க.




தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரிடம், கொடைக்கானல் எஸ்டேட்டை எழுதித் தருமாறு கேட்டாங்க... அவர் மறுப்பு தெரிவித்ததால், அவரை துரோகியாக சித்தரித்து, கட்டம் கட்டி, வெளியேற்றி, ஆளுங்கட்சிக்கு போக வைச்சாங்க. கோவை மாவட்டத்தை சேர்ந்த "மாஜி' ஒருத்தரிடம், கோடிக்கணக்கில் பணம் பிடுங்கினாங்க... ஆனா, அவருக்கு கட்சியால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவரோட ஓட்டல் ஒன்றை பிடுங்கவும் திட்டம் போட்டு, பேரம் பேசியதால் அவர் நம்ம கட்சியே வேண்டாம்னு சொல்லி ஓடிட்டார். அம்மா வழக்குகளை கவனித்து வந்த ஜோதி, சேலம் செல்வகணபதியில் துவங்கி இப்ப வெளியேறியுள்ள கோவில்பட்டி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் வரை எல்லாத்துக்கும் இந்த கும்பல்தான் பின்னணியில் இருந்திருக்கு. இவ்வாறு சொல்லிக்கொண்டே போனார் மாவட்டம். "கட்சி, அவங்க கட்டுப்பாட்டில் இருக்குன்னு சொல்றதை நானும் ஏத்துக்கிறேன். ஆனால், தி.மு.க.,வோட கூட்டு வைச்சிகிட்டு செயல்படறாங்கங்கிறதை நம்ப முடியலையே'ன்னு நானும் ஒரு கேள்வி கேட்டேன். "நம்பிக்கையான தகவல் இல்லைன்னா, உங்கிட்ட இதைச் சொல்வேனா'ன்னு சொல்லிட்டு மாவட்டம் மறுபடியும் பேச ஆரம்பிச்சார்.




குறிப்பிட்ட குடும்பத்தினர் நடத்தும் மதுபான கம்பெனியின் சரக்குகள் தான், நம்ம ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் முழுமையாக, "சப்ளை ஆச்சு. அந்தக் கம்பெனி அவங்களது தான்னு ஊருக்கே தெரியும். இப்ப ஆட்சி மாறியும், அதே கம்பெனியில் இருந்து 70 சதவீதம் சரக்கு, டாஸ்மாக்குக்கு சப்ளை ஆகுதே... அது எப்படி? "அது மட்டுமல்ல, அந்த குடும்பத்தை சேர்ந்தவங்க மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் ஏன் இழுவையா இழுத்திட்டு இருக்கு. கட்சியை பலவீனப்படுத்தி, தி.மு.க.,விற்கு சாதகமாக நடக்க திட்டமிட்டு ஒவ்வொரு வேலையா செஞ்சிட்டு இருக்காங்க. "கொஞ்ச நாள் முன்னால நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில, "ஆட்சியில் இருந்த போது, உங்களிடம் ஒரு பைசாவாவது நான் கேட்டேனா. எல்லாவற்றையும் நீங்கள்தானே அனுபவித்தீர்கள். இப்போது நிதி தேவைப்படுகிறது. கொடுங்கள். எத்தனை நாள்தான் பொதி மாடு மாதிரி, நான் ஒருத்தி மட்டும் கட்சியை இழுத்துச் செல்வது'ன்னு அம்மா பேசினாங்க. "அதைக்கேட்ட அத்தனை பேரும் அதிர்ச்சியாகி, ஒருத்தரை ஒருத்தர் பாத்துகிட்டோம். அப்படின்னா, ஆட்சியில் இருந்தபோது, கொடுத்த கோடிகள் எல்லாம், அம்மாகிட்ட போகலையா... இல்லை அம்மாவுக்கு தெரியாதான்னு குழம்பம்தான் மிஞ்சியது' என வருத்தத்தோடு சொல்லி முடித்தார் மாவட்டம்.




இதை விட நிறைய தகவல்களை அவர் சொன்னாருன்னாலும், கட்சியின் நலன் கருதி, நான் உங்ககிட்ட சில விஷயங்களைத்தான் சொல்லியிருக்கிறேன். இந்த தகவல்கள் எல்லாம் தெரிஞ்சிருந்தும், இன்னும் ஏதோ ஒரு நம்பிக்கையில், "எங்கே செல்லும் இந்தப் பாதை'ன்னு பாட்டு பாடிட்டு, கட்சியில் நாங்க தொடர்ந்துட்டு இருக்கோம். "எங்க வீட்டு பிள்ளை'யில் தலைவர், சவுக்கை சுழட் டுற மாதிரி, "நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்னு' பாடிட்டு, கட்சி விரோத கும்பலை வெளியேத்திடுங்க. என்னை மாதிரியான உண்மைத் தொண் டர்கள், உங்களை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைச்சிடுவோம். அதுவரை, "என்னதான் நடக்கும் நடக் கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டு மே... தன்னால வெளிவரும் தயங்காதே... ஒரு, "தலைவி' இருக்கிறார் மயங்காதே'ன்னு தலைவர் கொடுத்த நம்பிக்கையோடு, நாட் களை நகர்த்திட்டு இருக்கிறோம். இப்படிக்கு,உங்களின் உண்மை விசுவாசி. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் வினியோகிக்கப்பட்டிருக்கும் இந்த கடிதத்தால், அ.தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6531

No comments:

Post a Comment